Wednesday, June 21, 2017

அரங்கம் என்னும் ஊர் - Part 4

திருமழிசை  பிரான்   -  திருச்சந்தவிருத்தம் - 49

கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனிகூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி உள்மகிழ்ந்த நாதன் ஊர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய - நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அந்தணீர் அரங்கமே!

(1) கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனிகூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி உள்மகிழ்ந்த நாதன் ஊர்

தன் கொண்டையிலே இருக்கும் மாலையின் மேல் வண்டுகள் ரீங்காரமிடும் அலங்காரம் உடைய கூனியின் கூன் உடலினுள் செல்லும் படி உண்டையை வில்லில் வைத்து அடித்து மகிழ்ந்த  இராமன் இருக்கும் ஊர் -  எது?

(2) நண்டை உண்டு நாரை பேர - நண்டை உண்டுவிட்டதால் நகரமுடியால் மெதுவாக நகருவதை சொல்வது
வாளை பாய - அதைக் கண்டு பயந்து விலகும் வாளை மீன்கள்
நீலமே அண்டை கொண்டு கெண்டை மேயும் - நாரை, வாளை ஆகியவற்றை கண்டு பயந்து ஒதுங்கி கருநெய்தல் மலர்கள் நிழலில் ஒதுங்கும் கெண்டை மீன்கள்

அந்தணீர் அரங்கம் - அழகியதாய், அனைவரின் களைப்பையும் தீர்க்கும் நீர்நிலைகள் உடைய பெரிய கோயிலான திருவரங்கம்.

(3) அவ்வளவு தானா?

கூனி - இவ்வுலகில் உள்ள ஜீவன்
கூன் - இந்த சரீரம் தான் நாம் என்று நினைக்கும் குறை  (தேகமே ஆத்ம என்னும் நினைவு - அஹங்காரம் )
உண்டை... நாதன்  - அந்த அகங்காரத்தை விளையாட்டாக போக்கும் எம்பெருமானான இராமன்
ஊர் - அவன் இருக்கும் இடம்

நண்டை உண்ணும் நாரை - உலகவிஷயங்களை போகமாக கொள்ளும் சம்சாரிகள்
அவற்றை கண்டு விலகும் வாளை - சம்சாரிகளை கண்டு பயந்து, ஆனால் தன் முயற்சியால் மோக்ஷமடைய விரும்புபவர்கள்
நீலமே அண்டை கொண்டு கெண்டை மேயும் - மேல சொன்ன இருவரையும் கண்டு பயந்து நீலவண்ணனான  எம்பெருமான் ஒருவனையே புகலாக கொண்டு இருக்கும் ப்ரபன்னர்கள்

அந்தணீர் அரங்கம் - எல்லா தாபங்களையும் தீர்க்கும் (இராமபிரான் இருக்கும்) திருவரங்கம்.

(4) நீலமே அண்டை கொண்டு - கருத்ததாய், மென்மையும், மணமும் கொண்ட மலர் என்பதால், இதுவும் எம்பெருமானின் அழகையே சொல்கிறது. பெரிய பெருமாளின் அழகே அனைவர்க்கும் உபாயமாகவும், அனுபவிக்க தக்கதாயும் இருக்கும்.

ஆகையால் - அழகனூர் அரங்கமே  - அந்தணீர் அரங்கமே!

அரங்கம் என்னும் ஊர்!!

No comments:

Post a Comment