Wednesday, December 18, 2013

கட்டுச்சோறும் தடாகமும் - பரகால நாயகியின் ஏற்றம்

கலியனின் திருநட்சத்திர உற்சவத்தில் சிந்தனைகினியானின் ஸ்ரீபாத தீர்த்தத்தையே நீராட்டத்திற்கு வேண்டியிருக்கும் இருப்பை பார்த்த போது
இந்த பாசுரம் நினைவுக்கு வந்தது.

திருமங்கை மன்னனின் மிருது ஸ்வபாவத்தை பல பாசுரங்களில் கண்டுள்ளோம். அவரின் ஏற்றத்தையும் கண்டுள்ளோம். அவ்வரிசையில் இந்த திருநெடுந்தாண்டக பாசுரம்...


முதலில் பிராட்டியையும் பெருமானையும் சொல்லுகிறார். அவனின் கிழத்தனம் இல்லாத இளமைக்கு பொருத்தமாக இருக்கும் யுவதியான பிராட்டியை  - முற்றாரா வனமுலையாள் என்கிறார். பிராட்டியின் முலையை சொல்வானேன்? நித்ய விபூதி , லீலா விபூதி என்ற இரண்டையும் ஆள்வதற்கு சக்தியையும் ஞானத்தையும் உடைய இவன், பிராட்டியின் ஒரு அவயவத்தை/ அழகை அறிய முடியாதவன் போல் இருக்கிறான்.

அதைபோல்  அவளும் அவன் மொய்யகலத்துள் இருப்பாள். அதாவது அகலகில்லேன் என்று அவன் மார்பை தவிர வேற இடத்தை அறியாதவள் ஆகிறாள்.

இப்படி இருவரும் பித்தேறி இருப்பதை தாய் கூறி, அவனிடம் ஆசைப்பட்டு பயனில்லை என்கிறாள்.  ஆனால் பரகால நாயகியோ அடியவரிடம் குற்றம் பார்க்காத அவர்கள் குணத்தால் , அந்த இருவரிடமே செல்ல ஆசை படுகிறாள்.

"என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடை ஆவியே என்னும் " -திருவாய்மொழி 7-2-9 என்பதையே பதிலாக கூறுகிறாள்.

இப்படிப்பட்ட இவர்களை கண்டு தன் பெண்மையை இழந்தாள்.  சென்ற பாசுரத்தில் "எம்பெருமான் திருவரங்கம் எங்கே" என்று வழி தேடிய இவள் இந்த பாட்டில் பிராட்டியோடு கூடிய இவனை நினைத்து பெருமூச்செறிகிறாள்.

இருந்தும், தோழியை பார்த்து "நாம் அணியரங்கம் சென்று ஆடுதும்" ,  அனைத்து தாபங்களும் தீர திருவரங்கம் என்னும் பொய்கையில் களைப்பை தீர்த்து கொள்வோம் என்கிறாள்.

 யார் எது சொன்னாலும் கேட்கிறாள், தாயாகிய நான் சொன்னால் (இறையும் - சிறிது கூட கேட்க மறுக்கிறாள். (இந்த இறையும் எவ்வளவு பாசுரங்களில் வருகிறது  - நாணினார் போல் இறை  - தூமுறுவல் நகை இறை ))  

திருவரங்கத்தை அடைய வேண்டிய இவள், திருப்பேரையும் திருகுடந்தையையும் ஏன் சொல்கிறாள்? திருக்குறையலூரில் இருந்து திருவரங்கம் செல்ல குடந்தை, திருப்பேரை வழியாக செல்கிறாள். வழியில் இவையே கட்டுச்சோறு. 

தமிழில் நாயக, நாயகி கலவியை நீராட்டம் என்பது வழக்கம். ஆகையால் பொற்றாமரை கயம் என்பது திருவரங்கத்து பெரிய பெருமாளை சொல்லுகிறது. அந்த தடாகமாகிய பெருமாளை தேடி செல்கிறாள். 

இப்படி செல்லும் பெண்ணை ஏன் தடுக்கவில்லை என்று கேட்டபோது , தடுக்கும் நிலையை தாண்டி என் பெண் சென்று விட்டாள்.  முதலில் சொல்லிய பிராட்டி கூட இவளுக்கு ஒப்பாக மாட்டாள்.  "பின்னை கொல் நிலமாமகள் கொல் திருமகள் கொல் " என்று நம்மாழ்வார் அருளிச்செய்த படி ஸ்ரீ, பூ, நீளா தேவிகள் மூவர் சேர்ந்தால் ஒருவேளை பரகால நாயகிக்கு ஒப்பாகலாம். 

உம் பொன் -  உங்கள் பெண்கள் இப்படி பட்டவர்களா? என்று தாய் மற்றவரிடம் வினவுகிறாள். உட்பொருள்  - மற்றைய ஆழ்வார்களை விட இவர் மேம் பட்டவர்.  " மத்துறு கடை வெண்ணை களவினில் உர விடையாப்புண்டு" என்று கிருஷ்ணா அவதாரத்தில் ஏங்கிய நம்மாழ்வாரை விட அர்ச்சையில்ஏங்கிய இவரே மேம்பட்டவர் ஆகிறார்.  


2 comments:

  1. மாறன்கலைக்கு ஆறங்கம் கூற அவதரித்தவர், 'யாம் மடலூர்தும்' என்ற மாறன் மடலூரப்பெறாத குறை தீர இருமடல்கள் ஈந்து மகிழ்ந்தவர், மாறன்கலை ஒதும் மறையவர் ஆயிரவர்க்கு மணவிருந்து அளித்தவர், மாறங்கலைக்கு வேத ஸாம்யத்தைப்பெற்று மாறனின் அர்ச்சை திருமேனியை திருவரங்கத்திற்கு எழுந்தருளப் பண்ணி அத்யயனம் உற்சவம் கொண்டாடி மகிழ்ந்தவர், தன் மைத்துனர்க்கு வழங்கிய தமது அர்ச்சை திருமேனியில் மாறன் பதக்கம் சூடி மகிழ்பவர், தன்னை மாறனிலும் மாறுபட்டவர் என்றால் மனம் ஒப்பலாமே யன்றி மேம்பட்டவர் என்றால் ஒப்பமாட்டார்.

    ReplyDelete
  2. பெரியவாச்சான் பிள்ளை அவ்வாறு மேம்பட்டவர் என்று கூறவில்லை. அவதாரத்தை அநுஸந்தித்திறே அவர்கள் மோஹித்தது; அர்ச்சாவதாரத்திலேயிறே இவள் மோஹித்தது என்று அடியாரோடும் ஒக்க எண்ணப் பெற முடியாதவர் என்று மாறுபட்டவராகக் காட்டுகிறார். அர்ச்சாவதரத்திற்கு ஒரு ஊடல் பதிகமும் (நும்மைத்தொழுதோம்) அவதாரத்திற்கு ஒரு ஊடல் பதிகமும் (காதில் கடிப்பிட்டு) அளித்தாலும் திருக்குடந்தை எம்பெருமானை நினைத்துக்கொண்டே தானுகந்த ஊரெல்லாம் தன் தாள் பாடுவதும் பதியேபரவித்தொழுவதுமாக பொழுதுபோக்கி உபதேசிக்கின்ற பொழுது கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை யென்று மண்டி உய்வுபாயம் கூறுவதிலும் மாறுபட்டவர்.

    ReplyDelete